CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இன்று கடைசி 20 ஓவர் ஆட்டம் – பும்ரா விளையாட வாய்ப்பு
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா முதல் 2 ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தற்போது தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியிலும் இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனால் அந்த அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய வீரர்கள் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் போட்டியில் விளையாடவில்லை. இதனால் இன்றைய கடைசி ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
பும்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தால் தீபக்சாஹர் அல்லது ஷர்துல் தாகூர் நீக்கப்படலாம். இதேபோல மனீஷ்பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைத்தால் சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்படலாம்.
மனீஷ்பாண்டே முதல் 20 ஓவர் போட்டியில் சரியாக ஆடவில்லை. அவரது இடத்தில் இடம்பெற்ற ஸ்ரேயாஷ் அய்யர் 2-வது போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதேநேரத்தில் சஞ்சு சாம்சன் நல்ல நிலையில் இருப்பதால் அவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே.
சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சியில் உள்ளது. அந்த அணி இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.