TAMIL

இன்னொரு உலக கோப்பை போட்டியில் விளையாடி இருப்பேன் – யுவராஜ் ஆதங்கம்

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று களம் திரும்பிய யுவராஜ் சிங் 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு அணியில் சேர்க்கப்படாததால் கடந்த ஜூன் மாதம் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இந்த நிலையில் யுவராஜ் சிங் தனியார் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-



2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு இன்னொரு உலக கோப்பை போட்டியில் என்னால் விளையாடி இருக்க முடியும். இந்திய அணி நிர்வாகத்தில் இருந்தவர்களோ? என்னை சுற்றி இருந்தவர்களோ? எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து இருந்தால் நான் மேலும் ஒரு உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கலாம். நான் ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் எனது சொந்த முயற்சியில் நடந்தவையாகும். எனக்கென்று ஒருபோதும் யாரும் அரணாக இருந்தது கிடையாது.

2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2 ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றேன். இலங்கை தொடருக்கு முன்பு காயம் ஏற்பட்டதால் அதில் இருந்து மீண்டு வர தயாராகி கொண்டு இருந்த நிலையில் அணியில் இருந்து நீக்கப்படுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்க வில்லை.

என்னால் ‘யோ-யோ’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என நினைத்தார்கள். ஆனால் நான் 36 வயதில் யோ-யோ தகுதி தேர்வுக்கு தயாராகி அதில் தேர்ச்சியும் பெற்றேன். பிறகு என்னை உள்ளூர் போட்டியில் விளையாடும் படி சொன்னார்கள். அதன் பிறகு என்னை எளிதாக நிராகரித்து விட்டார்கள். 15 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஒரு வீரரை மரியாதை நிமித்தமாக அழைத்து சூழ்நிலையை விளக்கி கூறாமல் அணியில் இருந்து நீக்கியதை துரதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

முன்பு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி மட்டுமே இருந்தது. அதற்கு ஒருவரே கேப்டன் பொறுப்பை வகித்தது பொருத்தமானதாக அமைந்தது. தற்போது 20 ஓவர் போட்டி உள்பட மூன்று வடிவிலான போட்டிகள் நடைபெறுகிறது. எல்லா வகையிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதை விராட்கோலி அதிக சுமையாக கருதினால் 20 ஓவர் போட்டிக்கு வேறு ஒருவரை கேப்டனாக கொண்டு வர முயற்சி செய்யலாம். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் ரோகித் சர்மா மிகவும் வெற்றிகரமான கேப்டன். இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க முடியும்.

பேட்டிங்கில் 4-வது வரிசையில் களம் இறங்கக்கூடிய அளவுக்கு விஜய் சங்கர், ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு போதிய அனுபவம் இல்லை. தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரர். அவரை வெளியில் வைத்து விட்டு உலக கோப்பை அரைஇறுதியில் திடீரென களம் இறக்கினார்கள். ஒரு வீரரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றால் அணியில் வீரரின் இடத்துக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். அணியில் இடம் பெறுவதில் நிச்சயமற்ற தன்மை இருந்தால் ஒரு வீரரால் ஒருபோதும் சிறப்பாக செயல்பட முடியாது. அது தான் இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker