CRICKETSCHOOL SPORTSTAMIL
இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மூன்று நாட்கள் கொண்ட இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (7) நிறைவுக்கு வரும் போது, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை விட 90 ஓட்டங்கள் பின்தங்கி காணப்பட்ட யாழ். மத்திய கல்லூரி அணியினர் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர்.
யாழ். மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் சன்சயன் 15 ஓட்டங்கள் பெற்றிருக்க, இந்துஜன் 13 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இன்று (7) போட்டியின் மூன்றாவதும் கடைசியுமான நாளில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 90 ஓட்டங்கள் தேவைப்பட்டவாறு யாழ் மத்திய கல்லூரி அணியினர் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
பின்னர், மூன்றாம் நாளில் யாழ் மத்திய கல்லூரிக்காக இந்துஜன் அரைச்சதம் விளாசி சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தார். மேலும், இந்துஜன் பெற்ற அரைச்சதம் இந்த ஆண்டுக்கான வடக்கின் சமரில் வீரர் ஒருவர் பெற்ற முதல் அரைச்சதமாகவும் அமைந்தது.
எனினும், இந்துஜனின் விக்கெட் விதுஷனின் சுழலில் விழ, யாழ். மத்திய கல்லூரி அணியினர் தடுமாற்றம் காண்பித்ததோடு, சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஏனைய சுழல் வீரரான சரணிடமும் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர்.
இதன் காரணமாக, மூன்றாம் நாளுக்குரிய போட்டியின் முதல் இடைவெளியில் 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த யாழ் மத்திய கல்லூரி அணியினர் போட்டியில் 17 ஓட்டங்களால் இன்னிங்ஸ் தோல்வியடைந்தனர்.
யாழ் மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் விளாசிய இந்துஜன் 76 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற சன்சயன் 27 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், யாழ் மத்தியை இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்ய வைத்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான அன்டன் சரண் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்க்க, விதுஷன் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன், 2018 ஆம் ஆண்டில் வடக்கின் சமர் வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்த, யாழ் மத்திய கல்லூரியிடம் இருந்து சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இந்த ஆண்டுக்கான கிண்ணத்தைப் பெற்றுக் கொள்கின்றது.
போட்டியின் ஆட்ட நாயகனாக சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் சுழல் பந்துவீச்சாளரான அன்டன் சரண் தெரிவானர்.
விருதுகள்
சிறந்த பந்துவீச்சாளர் – அன்டன் சரண் – சென். ஜோன்ஸ் கல்லூரி
சிறந்த துடுப்பாட்ட வீரர் – இந்துஜன் – யாழ். மத்திய கல்லூரி
சிறந்த விக்கெட்காப்பாளர் – பிரணவன் – சென். ஜோன்ஸ் கல்லூரி
சிறந்த சகலதுறை வீரர் – டினோஷன் – சென். ஜோன்ஸ் கல்லூரி
சிறந்த களத்தடுப்பாளர் – சபேஷன் – சென். ஜோன்ஸ் கல்லூரி