TAMIL
இனவெறி சர்ச்சை: மன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது சில வீரர்கள் என்னை ‘கலு’ என்று அழைத்தார்கள். அப்படி அழைக்கும் போது சிலர் சிரிப்பதும் உண்டு.
அந்த சமயத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது இனரீதியாக இழிவுபடுத்தும் நோக்கில் அந்த வார்த்தை சொல்லப்பட்டதாக நான் அறிகிறேன்.
எந்த நோக்கில் அவ்வாறு என்னை அழைத்தார்கள் என்பதை அந்த நபர்களிடமே கேட்க விரும்புகிறேன். எனவே அப்படி என்னை அழைத்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.
அவர்கள் தவறான எண்ணத்தில் பேசி இருந்தால் அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்‘ என்று ஆதங்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்பந்தபட்ட வீரர் ஒருவர் டேரன் சேமியுடன் பேசியதை அடுத்து அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்.
இது குறித்து டேரன் சேமி தனது டுவிட்டர் பதிவில், ‘ஒரு வீரர் என்னுடன் மனம் விட்டு பேசினார்.
அந்த விவாதம் சிறப்பானதாக அமைந்தது. அந்த சகோதரர் பாசத்தின் காரணமாகவே அதுபோல் என்னை அழைத்ததாக உறுதிபட கூறினார்.
அதனை நானும் நம்புகிறேன். இதனால் இந்த விஷயத்தில் இனிமேல் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.
நடந்த எதிர்மறையான விஷயங்களில் கவனத்தை செலுத்துவதை விடுத்து, இதனை ஒரு பாடமாக நினைத்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறோம்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.