TAMIL
இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. பெண்கள் கனவு அணியில் மந்தனாவுக்கு இடம்
இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் எல்சி பெர்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் 441 ரன்னும், 21 விக்கெட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 3 சதம் அடித்துள்ளார்.
அத்துடன் 20 ஓவர் போட்டியில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி சிறந்த 20 ஓவர் வீராங்கனை விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.
அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 148 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார்.
தாய்லாந்து வீராங்கனை சனிதா சுதிருயாங் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை பெறுகிறார்.
இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. கனவு லெவன் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்திய வீராங்கனைகள் மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் ஆகியோரும், 20 ஓவர் போட்டிக்கான அணியில் இந்திய வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.