CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் – முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5-வது முறையாக கோப்பையை வென்றுத்தந்த பிறகு ரோகித் சர்மாவின் பதற்றமில்லா சாதுர்யமான கேப்டன்ஷிப் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை கைப்பற்றியவருமான கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இல்லாவிட்டால் அது இந்திய அணிக்கு இழப்பே தவிர, அவருக்கு அல்ல. சிறந்த அணியை பெற்றால் தான் ஒரு கேப்டனால் சாதிக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒருவர் நல்ல கேப்டனா? இல்லையா? என்பதை எதை வைத்து மதிப்பிடுவது? இதற்கான அளவுகோலும், திறன்மதிப்பீடும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தனது தலைமையில் 5 கோப்பைகளை வென்றுள்ளார். டோனியை ஏன் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று சொல்கிறோம். அவர் இரண்டு உலக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அத்துடன் 3 ஐ.பி.எல். கோப்பைகளையும் வென்று சாதித்துள்ளார். இதே போல் ரோகித் சர்மா ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக விளங்குகிறார். எனவே குறுகிய வடிவிலான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) போட்டிக்கான இந்திய அணிக்கோ, குறைந்தது 20 ஓவர் போட்டிக்கான அணிக்கோ அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும். இது நடக்காவிட்டால் உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானதாக இருக்கும். ஒருவரால் இதைவிடவும் சாதித்துக்காட்ட முடியாது.

கேப்டன்ஷிப்பை கோலி, ரோகித் சர்மாவுக்கு பிரித்து வழங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கலாம். இது ஒன்றும் மோசமான யோசனை கிடையாது. வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் தனக்கும், கோலியின் கேப்டன்ஷிப்புக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை ரோகித் சர்மா காட்டியுள்ளார்.

ஒருவர் 5 முறை ஐ.பி.எல். கோப்பைகளை வசப்படுத்தியுள்ளார். இன்னொருவர் (கோலி) இன்னும் ஒரு தடவை கூட கோப்பையை வெல்லவில்லை. அதற்காக கோலியை மோசமான கேப்டன் என்று நான் சொல்லவில்லை. இருவரும் ஒரே சமயத்தில் தான் ஐ.பி.எல். அணிகளின் கேப்டனாக பொறுப்பேற்றனர். இதில் ரோகித் சர்மா தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துள்ளார்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கேள்விக்கே இடமின்றி, இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும். வீரர்களை வழிநடத்துவதில் ஒரு அற்புதமான தலைவர். 20 ஓவர் போட்டிகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது அவருக்கு முழுமையாக தெரியும். இதன் மூலம் விராட் கோலியும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் ஒரு வீரராக நெருக்கடி இன்றி விளையாட முடியும்’ என்று குறிப்பிட்டார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker