இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக இருந்த ராஜஸ்தான் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. அஜித் சிங்கின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யான 70 வயது ஷபிர் உசேன் ஷேகதாம் கந்த்வாவாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஷபிர் உசேன் கருத்து தெரிவிக்கையில், ‘உலகின் சிறந்த கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அங்கம் வகிப்பதை சிறப்பான கவுரவமாக கருதுகிறேன். பாதுகாப்பு விஷயத்தில் எனக்கு இருக்கும் அனுபவம் இந்த புதிய பணிக்கு உதவிகரமாக இருக்கும். சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக ஆக்குகிறார்களோ? இல்லையோ? அது வேறு விவகாரமாகும். சூதாட்டத்தை அனுமதித்தால் அது ‘மேட்ச் பிக்சிங்’ நடக்க வழிவகுக்கும் என்பது போலீஸ் அதிகாரி என்ற முறையில் எனது கருத்தாகும். சூதாட்டத்தை இதுவரை அரசு சட்டப்பூர்வமாக ஆக்காமல் இருப்பது நல்ல முடிவாகும்’ என்றார்.