TAMIL

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி நீடிக்க முடியுமா?சுப்ரீம் கோர்ட்டு விரைவில் முடிவு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி அளித்த சிபாரிசுகளின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

அவற்றில் முக்கியமான ஒன்று, ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திலோ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அல்லது

இரண்டிலும் சேர்த்தோ தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் அடுத்த 3 ஆண்டுகள் கட்டாயம் இடைவெளிவிட்டு தான் மீண்டும் பொறுப்புக்கு வர முடியும் என்பதாகும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த விதிமுறையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கு உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர்.

அதாவது ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் ஏற்கனவே பதவியில் இருந்தாலும் அதை கணக்கிடாமல் இந்திய கிரிக்கெட் வாரியத்திலேயே தொடர்ந்து 6 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் பி.சி.சி.ஐ. செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுக்கு மேலாக பதவி வகித்து இருப்பதால் அதையும் சேர்த்து பார்க்கும் போது இந்த மாதத்துடன் 6 ஆண்டு பணி நிறைவு செய்கிறார்.

அதன் பிறகு அவர் பி.சி.சி.ஐ. தலைவராக நீடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷாவும் இதே சிக்கலில் தவிக்கிறார்.

முன்பு குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் பொறுப்பில் இருந்த காலத்தையும் கணக்கிடும் போது ஜெய் ஷாவின் பதவி காலம் கடந்த மாதமே முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

இவர்களை பதவியில் நீட்டிக்க செய்யும் வகையில் திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு அனுமதி கேட்டு பி.சி.சி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி ஷரத் பாப்டே, நீதிபதி நாகேஷ்வர ராவ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறிது நேரம் விசாரித்த நீதிபதிகள் அடுத்த 2 வாரத்துக்கு பிறகு இந்த விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி வழக்கை தள்ளி வைத்தனர்.

இவர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டால் கங்குலி 2024-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிம்மாசனத்தில் அமர முடியும்.

நிராகரித்தால், உடனடியாக பதவி விலக வேண்டியது இருக்கும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker