TAMIL
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு – மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்
லோதா கமிட்டி சிபாரிசின் படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் நிர்வாக சீர்திருத்தத்தை அமல்படுத்தி புதிய விதிமுறையின் படி நிர்வாகிகள் தேர்தலை நடத்தும் வரை கிரிக்கெட் வாரிய நிர்வாக பணிகளை கவனிக்க வினோத்ராய் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இருந்து நிர்வாக கமிட்டியினர் தான் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உத்தரவின் பேரில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் மும்பையில் 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.
இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்கள் என்.சீனிவாசன், அனுராக் தாகூர், முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா, ஐ.பி.எல். முன்னாள் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் டெல்லி மற்றும் மும்பையில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் பிரிஜேஷ் பட்டேலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் வேட்பாளராக கங்குலி மாற்றம் செய்யப்பட்டார்.
இதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையத்தில் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 47 வயதான கங்குலி இந்திய அணிக்காக 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற முடியாது என்ற அவப்பெயரை மாற்றியவரும், ஆக்ரோஷமான கேப்டன் என்ற பெயரை பெற்றவருமான கங்குலி 2012-ம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து விடைபெற்றார். அவர் தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்து வருகிறார். கங்குலியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வருகிற 23-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய பொதுகுழுவில் கங்குலி தேர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதுடன், பதவி பொறுப்பையும் ஏற்பார்.
இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாகூரின் சகோதரரும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண்சிங் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கர்நாடகாவை சேர்ந்த 66 வயதான பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். சேர்மனாக போட்டியின்றி தேர்வானார்.
லோதா கமிட்டி சிபாரிசின் படி மாநிலம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள் தொடர்ந்து 6 வருடத்திற்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது. அந்த பதவி காலம் முடிந்ததும் 3 வருடம் இடைவெளி விட்டு தான் மீண்டும் பதவிக்கு வர முடியும். இதன்படி கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 9 மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய அணிக்காக விளையாடியதும், கேப்டனாக இருந்ததும் சிறப்பான தருணமாகும். கடந்த 3 வருடங்களாக இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பான நிலையில் இல்லை. கிரிக்கெட் வாரியத்தின் மதிப்பு நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறேன். இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது செய்ய கிடைத்த பெரிய வாய்ப்பாக இதனை கருதுகிறேன்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மதிப்பை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர உடனடியாக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். நாங்கள் எல்லோரும் கலந்து பேசி முடிவு எடுப்போம். முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில் முன்னுரிமை அளிப்பேன். முதல் தர கிரிக்கெட் வீரர்களின் நலனுக்காக கடந்த 3 வருடமாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அவர்கள் எனது கோரிக்கையை கவனிக்கவில்லை. முதல் தர கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் குறித்து பேசி நல்ல முடிவு எடுப்பதே எனது முதல் பணியாகும்.
உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது என்பது பொறுப்பு வாய்ந்ததாகும். நிதி அளவிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் வலுவானது என்பதால் அதனை நிர்வகிப்பது என்பது சவாலானதாகும். லோதா கமிட்டி விதிமுறைப்படி எனக்கு பதவி காலம் 9 மாதம் தான் உள்ளது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நான் தேர்வு செய்யப்படுவேன் என்று எனக்கு முதலில் தெரியாது. இந்த பதவிக்கு வர நான் ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து நான் அரசியல்வாதிகள் யாரையும் சந்தித்து பேசவில்லை.
இரட்டை ஆதாய பதவி சர்ச்சை பெரிய பிரச்சினையாகும். இதனால் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் சேவையை இந்திய கிரிக்கெட் வாரியத்தால் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டும் என்ற விதிமுறையால் சிறந்த முன்னாள் வீரர்கள் பலரும் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. அத்துடன் தேசிய கிரிக்கெட் அகாடமி உள்பட பயிற்சியாளர் நியமனத்தில் கூட பிரச்சினை வருகிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டியது முக்கியமானதாகும். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் காலத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் கனிசமாக குறைந்து இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் 75 முதல் 80 சதவீதம் இந்தியாவில் இருந்து தான் செல்கிறது. நமக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டியது அவசியமானது. இந்திய கிரிக்கெட் வாரிய பொழுதுக்குழு கூட்டம் முடிந் ததும் புதிய தேர்வு கமிட்டி உள்பட துணை கமிட்டிகள் நியமனம் செய்யப்படும். இவ்வாறு கங்குலி கூறினார்.