TAMIL
இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 3 மாநிலங்களுக்கு தடை
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி மும்பையில் நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, அரியானா, மராட்டியம் ஆகிய மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இது பற்றிய தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி திருத்தம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைக்கு உட்பட்டு இந்த மாநில சங்கங்களின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை என்றும், அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘பி.சி.சி.ஐ. கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்கு வந்துள்ளது. ஆனால் இது கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி எடுத்த நடவடிக்கை ஆகும். பி.சி.சி.ஐ. கூட்டத்தில் பங்கேற்க எந்தெந்த மாநில சங்கங்களுக்கு தகுதி இருக்கிறது என்ற பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிட்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்’ என்றார்.