TAMIL
‘இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் கிடைக்காததற்கு காரணம் தெரியவில்லை’ – அமித் மிஸ்ரா ஆதங்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா 2003 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 22 டெஸ்ட் போட்டியில் விளையாடி 76 விக்கெட்டும், 36 ஒருநாள் போட்டியில் ஆடி 64 விக்கெட்டும், 10 இருபது ஓவர் போட்டியில் ஆடி 16 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடிய அவர் அதன் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கவில்லை.
ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் அமித் மிஸ்ரா ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் 37 வயதான அமித் மிஸ்ரா இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது கூறியதாவது:-
2017-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் காயம் அடைந்த பிறகு நான் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன்.
அதன் பிறகு எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஒருவர் வெளியேறினால், அவர் உடல் தகுதியை எட்டும்பட்சத்தில் அணியில் மீண்டும் இடம்பெற முடியும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
கடைசியாக காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் குணமடைந்து ஒன்றரை ஆண்டுக்கு பின்னர் இந்திய அணிக்கு திரும்பினார்.
ஆனால் அதுபோல் எனக்கு நடக்காதது ஏன்? என்பது தெரியவில்லை.
இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் சிறப்பாக செயல்பட்டேன். கடினமான சுழ்நிலையிலும் நான் நன்றாக ஆடினேன்.
நல்ல பார்மில் இருக்கையில் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதன் பிறகு உடல் தகுதியை எட்டியும் தேர்வாளர்கள் எனக்கு அழைப்பு எதுவும் விடுக்கவில்லை.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக மீண்டும் ஒரு முறை விளையாட வேண்டும் என்பது தான் எனது கடைசி ஆசையாகும்.
டோனிக்கு, சவுரவ் கங்குலியின் ஆதரவு கிடைத்தது போல் எனக்கும் கிடைத்து இருந்தால் நான் 70 முதல் 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பேன்.
2011-ம் ஆண்டு லண்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில், சச்சின் தெண்டுல்கருடன் இணைந்து விளையாடி 84 ரன்கள் எடுத்தது நினைத்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் நினைவுகூரத்தக்க தருணமாகும்.
கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து சகஜ நிலை திரும்ப வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அடுத்து சில மாதங்களில் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு கிரிக்கெட் போட்டியை தொடங்கலாம். தேவைப்பட்டால் ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம். அப்படி நடக்கும்பட்சத்தில் ரசிகர்கள் டெலிவிஷன் மூலம் போட்டியை கண்டு களிக்க முடியும் என்று அமித் மிஸ்ரா கூறினார்.