TAMIL
இந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் – யுவராஜ்சிங்
2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றியவர், யுவராஜ்சிங். 362 ரன்கள், 15 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக ஜொலித்த அவரே தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த உலக கோப்பை தொடரின் போது கேப்டனாக இருந்த டோனி, அணித்தேர்வில் சுரேஷ் ரெய்னாவுக்கு முக்கியத்துவம் அளித்ததாக யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
டி.வி. சேனலுக்கு யுவராஜ் அளித்த பேட்டியில், ‘சுரேஷ் ரெய்னாவுக்கு அப்போது நிறைய ஆதரவு இருந்தது. ஏனெனில் டோனி அவருக்கு பக்கபலமாக இருந்தார்.
ஒவ்வொரு கேப்டனுக்கும் அணியில் பிடித்தமான வீரர் யாராவது ஒருவர் இருப்பார். அந்த சமயத்தில் டோனியின் செல்லப்பிள்ளையாக ரெய்னா இருந்தார்.
அந்த நேரத்தில் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான் நன்றாக செயல்பட்டார். நானும் சிறப்பாக விளை யாடி விக்கெட்டுகளை கைப்பற்றினேன்.
அப்போது இந்திய அணியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கிடையாது.
இடக்கை சுழற்பந்து வீச்சாளரான நான் விக்கெட்டும் வீழ்த்தியதால் வேறு வழியின்றி என்னை வைத்திருந்தனர்’ என்றார்.
‘இந்திய கேப்டன்களிலேயே என்னை கவர்ந்தவர் சவுரவ் கங்குலி தான்.
மற்ற கேப்டன்களை காட்டிலும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.
இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார்’ என்றும் யுவராஜ்சிங் கூறினார்.
2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கி யுவராஜ்சிங் உலக சாதனை படைத்தார்.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார்.
இதை நினைவு கூர்ந்த யுவராஜ்சிங், ‘ஆஸ்திரேலிய பயிற்சியாளர் என்னிடம் வந்து பேட்டில் ஏதாவது பைபர் உள்ளதா என்று கேட்டார்.
இந்த பேட் விதிமுறைக்குட்பட்டு தான் இருக்கிறதா? போட்டி நடுவருக்கு தெரியுமா என்றும் கேட்டார். ஏன் நீங்களே பேட்டை பரிசோதித்து பாருங்கள் என்று அவரிடம் கூறினேன்.
பிறகு நடுவர் எனது பேட்டை வாங்கிப் பார்த்தார்.
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கூட என்னிடம் பேட் குறித்து கேட்டறிந்தார்.
உண்மையிலேயே அந்த பேட் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதே போல் 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் பயன்படுத்திய பேட்டும் எனக்கு ஸ்பெஷல் தான்’ என்றார்.
இதற்கிடையே டெல்லியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு 15 ஆயிரம் முககவசங்களை தனது அறக்கட்டளை மூலம் நன்கொடையாக வழங்கிய யுவராஜ்சிங்குக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.