TAMIL
இந்திய அணியின் இமாலய இலக்கு… தோல்வி பயத்தை காட்டிய பொல்லார்ட்! அபார வெற்றி பெற்ற கோஹ்லி படை
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் நடைபெற்று முடிந்த இரண்டு டி20 போட்டி 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது.
அதன் படி முதலில் ஆடிய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல், மேற்கிந்திய தீவு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்ய, இந்திய அணியின் ரன் விகிதம் சீரான விகிதத்தில் எகிறியது.
இதனால் அரைசதம் அடித்த ரோகித் சர்மா 71 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த ரிஷப் பாண்ட் டக் அவுட்டாகி வெளியேற, ராகுலுடன் சேர்ந்து விராட் கோஹ்லி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ராகுல் 91 ஓட்டங்களில் வெளியேற, இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்கள் எடுத்தது.
கோஹ்லி 70 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதன் பின் 241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணிக்கு துவக்க வீரர்களான சிம்மன்ஸ் 7 ஓட்டங்களிலும், பிராண்டன் கிங் 5 ஓட்டங்களிலும் அவுட்டாகி வெளியேறியதால், இந்திய வீரர்கள் உற்சாகமடைந்தனர்.
இருப்பினும் 5-வது வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு ஒரு வித தோல்வி பயத்தை காட்டி வந்த பொல்லார்ட் 39 பந்தில் 68 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, மேற்கிந்திய தீவு அணியின் தோல்வி உறுதியானது.
இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, மேற்கிந்திய தீவு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்து 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியது. இப்போட்டியில் மட்டும் இந்திய அணி வீரர்கள் 16 சிக்ஸர்களும், மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் 12 சிக்ஸர்களும் என மொத்தம் 28 சிக்ஸர்கள் பறக்கவிட்டனர்.