CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன் – ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் சொல்கிறார்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சமீபத்தில் எனக்கு 34-வது வயது பிறந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் எனது நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தியாவுக்கு எதிரான தொடரில் வாக்குவாதத்தின் மூலம் என்னை வம்புக்கு இழுக்க (சிலெட்ஜிங்) முயலும் வீரர்களிடம் இருந்து விலகி செல்லவே நான் விரும்புகிறேன். காலப்போக்கில் நான் கற்றுக்கொண்ட பாடம் இதுவாகும். என்னை சீண்டுபவர்களுக்கு எதிராக வாக்குவாதம் செய்யாமல் எனது பேட் மூலம் பதில் கொடுக்க முயற்சி செய்வேன்
ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் நல்ல தொடக்கம் கொடுப்பதுடன், மிடில் ஓவர்களில் உள்ள சிரமத்தை உணர்ந்து அதற்கு தகுந்தபடி விளையாட வேண்டும். முடிந்த அளவுக்கு நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடுவதுடன் ஸ்டிரைக் ரேட்டையும் நன்றாக வைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் நான் சிறப்பாக செயல்பட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக ஆக்ரோஷத்தை குறைத்து எனது பேட்டிங்கை ஒழுங்காக வெளிப்படுத்தி வருகிறேன்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நல்ல பங்களிப்பை அளிக்கக்கூடியவர். அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் ஆடாதது இழப்பாகும். ஆனால் இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், மயங்க் அகர்வால் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இவர்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர்.
விராட்கோலி இல்லாத சமயத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை வகிக்க இருக்கும் ரஹானே மிகவும் அமைதியானவர். அவரது ஆட்ட அணுகுமுறை நன்றாக இருக்கும். அவர் கிரிக்கெட் அறிவு படைத்தவர். அவரை சீண்டுவதற்கு முன்பு நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டும். இந்திய அணியை பொறுத்த மட்டில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் தன்மை கொண்ட மூன்று, நான்கு சிறந்த வீரர்கள் உள்ளது அவர்களுக்கு அனுகூலமாகும்.
வழக்கம் போல இந்த தொடரிலும் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அடுத்த ஒரு வருடத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக எத்தனை ஆட்டங்களில் விளையாடுவேன் என்று சொல்வது கடினமானதாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் கடந்த 6 மாதங்களில் விளையாடியது மிகவும் சவாலாக இருந்தது. குடும்பத்தை பிரிந்து இருத்தல், தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பது என்பது கடினமான விஷயமாகும். அடுத்த 12 மாதங்களில் சர்வதேச போட்டிகளில் ஆடுவது மிகவும் கடினமானதாக இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும், அதனை அடுத்து 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவோம். அத்துடன் 2023-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டி குறித்தும் கவனம் செலுத்துவோம். எனக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் நேரத்தை செலவிடவும் கடமைப்பட்டு இருக்கிறேன். எனவே மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாடுவது என்பது மிகவும் கடினமானதாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் வரை பிக்பாஷ் போட்டியில் விளையாடமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.