CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம் – தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வானார். நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததுடன் தன் மீதான எதிர்பார்ப்பையும் மெய்யாக்கினார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த 29 வயதான நடராஜன் ஏழ்மையை வென்று தனது விடாமுயற்சியால் இந்திய அணியில் இடம் பிடித்ததை தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சர்வதேச முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டினார்கள்.
இந்த நிலையில் நடராஜன் நேற்று தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய அணிக்காக ஆடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது. எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. கூடுதல் சவால்களை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.