TAMIL
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் – சென்னையில் இன்று நடக்கிறது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை போராடித் தான் வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறுகிய வடிவிலான போட்டிகளில் எப்போதும் அபாயகரமானவர்கள். அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.
கோலி, லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா சூப்பர் பார்மில் உள்ளனர்.
அதே வேகத்துடன் ஒரு நாள் தொடரிலும் ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள்.
ரிஷாப் பண்டின் பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
காயமடைந்துள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருக்கும் மயங்க் அகர்வால், புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக அழைக்கப்பட்டிருக்கும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இன்றைய களம் காணும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
அதே சமயம் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரில் இருவருக்கு இடம் கிட்டும்.
சில ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வெகுவாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி அதே வீறுநடையை இந்த தொடரிலும் நீட்டிக்க ஆர்வம் காட்டுகிறது.
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் என்று அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை.
பந்து வீச்சிலும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆனால் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்துவது தான் அவர்களுக்குரிய சவாலாகும்.
இதை சரியாக செய்தால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.
20 ஓவர் ஆட்டத்தின் போது கால் முட்டியில் காயமடைந்த இவின் லீவிஸ் இன்றைய போட்டியில் கால்பதிப்பது சந்தேகம் தான்.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவான திட்டமிடலுடன் தான் இங்கு வந்திருக்கிறோம்.
அதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றோம்.
தற்போது சிறந்த அணியான இந்தியாவுக்கு எதிராக விளையாட இருக்கிறோம்.
சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது.
எல்லாம் சரியாகி ஒரே நாள் இரவில் வெற்றி வந்து விடாது.
அதனால் தொடர்ந்து கடினமாக உழைக்க தயாராக உள்ளோம். ஆப்கானிஸ்தான் தொடரில் கிடைத்த வெற்றியை இந்த தொடரிலும் தொடர விரும்புகிறோம்.
அது தான் எங்களது ஒரே குறிக்கோளாகும். மிடில் ஓவர்களில் எப்படி நிலைத்து நின்று ஆடுவது என்பது குறித்து நாங்கள் விவாதித்து இருக்கிறோம்.
ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேசின் வருகை, அணியின் சரியான கலவைக்கு வழிவகுத்துள்ளது.
அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பங்களிப்பு அளிக்கக்கூடியவர் என்பதால் இன்னொரு பேட்ஸ்மேனையோ அல்லது பவுலரையோ கூடுதலாக சேர்க்க முடியும்.
அவர் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர் ஆவார். வெய்ன் பிராவோ ஓய்வு முடிவை கைவிட்டு அணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
பொதுவாக சென்னை ஆடுகளம் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும். இத்தகைய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடும்.
கடைசியாக இங்கு நடந்த 7 ஆட்டங்களில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கக்கூடும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி.
வெஸ்ட் இண்டீஸ்: சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ரோமரியோ ஷெப்பர்டு அல்லது காட்ரெல், கேரி பியர் அல்லது ஜாசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ், கீமோ பால், அல்ஜாரி ஜோசப்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
சென்னை மைதான கண்ணோட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் 1987-ம் ஆண்டில் இருந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 21 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.
இதில் இந்திய அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
2007-ம் ஆண்டு ஆப்பிரிக்கா லெவனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆசிய லெவன் அணி 7 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2011-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கென்யா அணி 69 ரன்னில் சுருண்டது குறைந்த ஸ்கோராகும்.
மொத்தம் 14 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் தற்போதைய கேப்டன்கள் விராட் கோலி (இந்தியா), பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் அடித்த தலா ஒரு சதமும் அடங்கும்.
1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 194 ரன்கள் எடுத்தது தனிநபர் அதிகபட்சமாகும். இந்திய முன்னாள் கேப்டன் டோனி 2 சதம் உள்பட 401 ரன்கள் குவித்து, அதிக ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கிறார்.
வெஸ்ட் இண்டீசின் ரவி ராம்பால், பாகிஸ்தானின் அகிப் ஜாவித் ஆகியோர் இந்த மைதானத்தில், இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
மழையால் பாதிக்கப்படுமா?
சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. லேசான மழை சாரலுக்கு இடையே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வலைபயிற்சி மேற்கொண்டனர்.
2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஒரு நாள் போட்டி நடக்க உள்ள நிலையில் மழையால் போட்டிக்கு ஆபத்து வந்து விடுமோ? என்று ஒரு பக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்.
ஆனால் இன்றைய தினம் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் ஆட்டம் பாதிப்பின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை…
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 130 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
இதில் இரு அணிகளும் தலா 62 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. மீதமுள்ள 4 ஆட்டங்களில் முடிவு இல்லை.
இவ்விரு அணிகள் இடையே இதுவரை 20 நேரடி ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நடந்துள்ளன. 12 தொடர்களை இந்தியாவும், 8 தொடர்களை வெஸ்ட் இண்டீசும் கைப்பற்றியுள்ளன.
இதில் கடைசியாக 9 தொடர்களை இந்திய அணி தொடர்ச்சியாக வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் டிக்கெட் விற்பனை
விதிமீறல் பிரச்சினையால் மூடப்பட்டுள்ள ஐ, ஜே, கே ஆகிய கேலரிகளை தவிர்த்து ஸ்டேடியம் 28 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்றும் விற்கப்பட இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் உள்ள டி மற்றும் இ பிரிவுக்கான ரூ.1,200 விலை கொண்ட டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணி முதல் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டரில் வாங்கிக் கொள்ளலாம்.
சாதனையை நோக்கி விராட் கோலி
இந்திய கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இதுவரை 36 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 சதம், 10 அரைசதம் உள்பட 2,146 ரன்கள் குவித்துள்ளார்.
இன்று தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் ஒரு சதம் அடித்தாலே அது மிகப்பெரிய சாதனையாக பதிவாகும்.
அதாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசியவர்களில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கருடன் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதம்) கோலி தற்போது சமனில் இருக்கிறார்.
ஒரு சதம் அடித்தால், தெண்டுல்கரின் இச்சாதனையை முறியடித்து விடுவார்.
அத்துடன் கேப்டனாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவரான ரிக்கிபாண்டிங்கின் (41 சதம்) சாதனையையும் தகர்த்து விடுவார்.