TAMIL
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 241 ரன்கள் இலக்கு
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஜோடி ஆரம்பத்திலேய சிக்ஸர் மழைகளைப் பொழிந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இதன் மூலம் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. இதனால் இந்திய அணி 48 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தது.
இந்நிலையில் ரோகித் சர்மா (71 ரன்கள் 34 பந்துகள்) கெஸ்ரிக் வில்லியஸ் வீசிய பந்தில் கேட்ச் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட்(0) பொல்லார்டு வீசிய பந்தில் ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் 91 ரன்களில் (9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதற்கடுத்ததாக 4 வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். களத்தில் அதிரடி ஆட்டம் காட்டிய விராட் கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் (4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்ததையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.