TAMIL
இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்காளதேச கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
விராட் கோலி தலைமையிலான இந்தியா, டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அணியாக திகழ்கிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது. இதில் கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்ததும் அடங்கும். விராட் கோலி, புஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
பலம் வாய்ந்த இந்தியாவை அனுபவம் இல்லாத இளம் வீரர்களை கொண்ட வங்காளதேச அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்பதே எல்லோரின் கேள்வியாகும். ஆனால் வங்காளதேச அணியில் யாரையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கு அவர்களிடம் திறமை இருப்பதாக இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.
வங்காளதேச அணியில் நட்சத்திர வீரர்கள் தமிம் இக்பால், 2 ஆண்டு தடை நடவடிக்கையில் சிக்கிய ‘நம்பர் ஒன்’ ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டில் முதலாவது ஆட்டத்தில் வெற்றி கண்டது அந்த அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை அளிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான். ஆட்டத்தை 5 நாட்களுக்கு நகர்த்தினாலோ, ஒரு வேளை டிரா செய்தாலோ உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம். டெஸ்டில் இதுவரை 8 சதங்கள் அடித்துள்ள கேப்டன் மொமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் மலைபோல் நம்பி உள்ளது.
வங்காளதேச அணியின் புதிய கேப்டனான மொமினுல் ஹக் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஏனெனில் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லை என்பதை அறிவோம். இந்திய பந்து வீச்சு சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம். நிச்சயம் எங்களுக்கு இது கடினமாகத்தான் இருக்கும். ஆனாலும் அதற்கு தயாராக உள்ளோம். கேப்டன்ஷிப்பால் எனது ஆட்டத்திறன் பாதிக்கப்படாது. முன்பு எப்படி பேட்டிங் செய்தேனோ அதே போல் தொடர்ந்து ஆடுவேன். ஷகிப் அல்-ஹசன் இல்லாதது அணியில் 2 வீரர்களை இழந்தது போல் உணர்கிறோம்’ என்றார்.
இந்தூர் ஆடுகளம் எப்போதும் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாகும். கொஞ்சம் பவுன்சும் இருக்கும். போக போக வழக்கம் போல் சுழல் ஜாலத்தை பார்க்கலாம்.
இந்த மைதானத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்ட் நடந்துள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடியதும், அதில் அஸ்வின் 13 விக்கெட்டுகளை சாய்த்ததும் நினைவு கூரத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.
வங்காளதேசம்: ஷத்மன் இஸ்லாம், சயிப் ஹசன் அல்லது இம்ருல் கேயஸ், மொமினுல் ஹக் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, முகமது மிதுன், லிட்டான் தாஸ், மெஹிதி ஹசன், தைஜூல் இஸ்லாம், அபு ஜெயத், எபாடத் ஹூசைன் அல்லது முஸ்தாபிஜூர் ரகுமான்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோவுடன் கேப்டன் மொமினுல் ஹக்.
இதுவரை…
இந்தியா – வங்காளதேச அணிகள் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இந்தியா வெற்றி பெற்றது. 2 போட்டி டிராவில் முடிந்தது.
வெற்றிக்கு 60 புள்ளி
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது ஆகும். ஒரு தொடருக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். இது 2 போட்டி கொண்ட தொடர் என்பதால் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிக்கும் 60 புள்ளிகள் கிடைக்கும். டிரா கண்டால் தலா 20 புள்ளிகள் வழங்கப்படும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி 240 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடம் வகிக்கிறது. நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன. வங்காளதேச அணி இந்திய தொடரில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக ஒவ்வொரு அணியும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 தொடர்களில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.