TAMIL
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: மழை காரணமாக ரத்து
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்க இருந்தது.
இந்தநிலையில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், தர்மசாலாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது.
மழை காரணமாக தாமதமானதால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும் என்று முதலில் கருதப்பட்டது.
அதாவது, 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், மழை தொடர்ந்ததால், மைதானம் ஈரப்பதமாகவே காணப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கபட்டது.
கொரோனா தொற்று காரணமாக மைதானத்தில் ரசிகர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டது.
ரசிகர்கள் கூட்டம் இன்றி மைதானம் விரிச்சோடி காணப்பட்டது.