TAMIL

இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்: அசத்தும் ரோகித் சர்மா

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 431 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது.



இதன்பின் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி பெற 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 4-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, முதல் இன்னிங்சில் 176 ரன்களும், 2-வது இன்னிங்சில் 127 ரன்களும் விளாசினார். இதன்மூலம் முதல் மற்றும் 2-வது இன்னிங்ஸ் ஆகிய இரண்டிலும் சதம் அடித்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரராக தனது முதல் போட்டியில் இரு இன்னிங்சிலும் சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்துள்ளார். இவர் இந்தப் போட்டியில் மொத்தமாக 13 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி வீரர் வாசிம் அக்ரமின் (12 சிக்ஸர்கள்) நீண்ட கால சாதனையை முறியடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தரப்பிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

அத்துடன் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 2-வது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பாக சுனில் கவாஸ்கர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 3 முறை இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா சார்பில் ஏற்கெனவே விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, ரஹானே ஆகியோர் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியுள்ளனர். தற்போது இந்தப்பட்டியலில் 6-வது வீரராக ரோகித் ஷர்மா இணைந்துள்ளார். இதில் சுனில் கவாஸ்கர் 3 முறையும், ராகுல் டிராவிட் 2 முறையும் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்துள்ளனர்.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பல எண்ணற்ற சாதனைகளை தன்வசம் வைத்துள்ள ரோகித் சர்மா தற்போது டெஸ் கிரிக்கெட் போட்டியிலும் சாதனைகளை படைத்து அசத்தி வருகிறார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker