TAMIL

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.



இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா, உள்ளூரில் எப்போதும் வலுவானது என்பதில் சந்தேகம் கிடையாது. இந்த முறையும் அதே ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்தோடு கோலியின் படை களம் இறங்குகிறது. அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெளியே உட்கார வைக்கப்பட்டு இருந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்த டெஸ்டில் பிரதான பவுலராக இருப்பார் என்று கேப்டன் கோலி கூறியுள்ளார். இதே போல் ரோகித் சர்மா மயங்க் அகர்வாலுடன் இணைந்து டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக அவதாரம் எடுக்கிறார். இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தொடர்ந்து சொதப்புவதால் அவர் கழற்றிவிடப்பட்டு மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சஹா, 22 மாதங்களுக்கு பிறகு விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே தூண்களாக உள்ளனர். சுழலில் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் மிரட்டுவார்கள். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக ஹனுமா விஹாரியை பயன்படுத்த முடியும். பொதுவாக இந்திய ஆடுகளங்களில் கடைசி இரு தினங்களில் சுழலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் அஸ்வின், ஜடேஜா மீது எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஜடேஜா இன்னும் 2 விக்கெட் எடுத்தால் 200 விக்கெட் மைல்கல்லை எட்டுவார்.

இந்திய அணி 2012-13-ம் ஆண்டில் இருந்து உள்ளூரில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி ஆஸ்திரேலியாவுடன் (10 வெற்றி) சமனில் உள்ளது. இந்த தொடரையும் இந்தியா வசப்படுத்தினால் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை சொந்தமாக்கிய அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும். அதே சமயம் தொடரை இழக்க நேரிட்டால் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பறிகொடுக்க வேண்டி இருக்கும். அதனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியமாகும்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை, இந்தியாவில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுவது உண்டு. அது தான் அவர்களின் பலவீனமும் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த போது 0-3 என்ற கணக்கில் உதை வாங்கினார்கள். அனுபவம் வாய்ந்த ஸ்டெயின், அம்லா ஓய்வு பெற்று விட்டதால் அந்த அணி இப்போது இளம் வீரர்களை தான் அதிகமாக சார்ந்துள்ளது. பயிற்சி கிரிக்கெட்டில் சதம் அடித்த மார்க்ராம் பார்மில் இருப்பது அவர்களுக்கு அனுகூலமாகும். அசுரவேக பவுலர்கள் காஜிசோ ரபடா, வெரோன் பிலாண்டர், சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் உள்ளிட்டோர் சற்று அசந்தாலும் காலி செய்து விடும் ஆற்றல் படைத்தவர்கள். பேட்டிங்கில் மார்க்ராமுடன் பாப் டு பிளிஸ்சிஸ், பவுமா, குயின்டான் டி காக்கும் நல்ல நிலையில் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘2015-ம் ஆண்டு இந்திய தொடரின் போது கடினமான சூழலில் நான் உள்பட பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினோம். கடினமான சீதோஷ்ண நிலையில் அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு, தடுப்பாட்ட யுக்தியில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். அந்த தொடரில் இருந்து நான் நிறைய பாடம் கற்றுக்கொண்டேன்.

அதன் பிறகு நான் சுழற்பந்து வீச்சில் நன்றாக விளையாடத் தொடங்கினேன். எனவே அனைத்து வீரர்களும் கடினமான கட்டத்தில் அதை உணர்ந்து விளையாட வேண்டும். இந்தியாவைச் சேர்ந்த அமோல் முஜூம்தர் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பது எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. அவர் எங்களுடன் குறைந்த காலமே இருப்பார். ஏற்கனவே அவருடன் நிறைய விவாதித்துள்ளோம். அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்கும் உத்வேகத்துடன் உள்ளனர். இந்த தொடரிலும் அதில் மாற்றம் இருக்காது’ என்றார்.

போட்டி நடக்கும் விசாகப்பட்டினத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்ட் நடந்துள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. அதில் வீழ்த்தப்பட்ட 40 விக்கெட்டுகளில் 25 விக்கெட் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பாகும்.

விசாகப்பட்டினத்தில் கடந்த வாரத்தில் அதிகாலை நேரத்தில் மழை பெய்தது. இந்த ஆட்டத்தின் போது லேசான மழை குறுக்கீடு இருக்கலாம். அவ்வாறான வானிலை நிலவினால், வேகப்பந்து வீச்சும் சற்று எடுபடக்கூடும். டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா.

தென்ஆப்பிரிக்கா: மார்க் ராம், டீன் எல்கர், தேனிஸ் டி புருன், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), பவுமா, குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), பிலாண்டர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி அல்லது அன்ரிஜ் நார்ஜே அல்லது செனுரன் முத்துசாமி, டேன் பீட்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

உலக சாம்பியன்ஷிப்பில் எத்தனை புள்ளிகள் கிடைக்கும்?

இந்தியா – தென்ஆப்பிரிக்கா தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உள்ளடக்கியது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். இதன்படி பார்த்தால் இது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிக்கும் 40 புள்ளிகளும், டிராவுக்கு 13 புள்ளிகளும் கிடைக்கும்.

ஏற்கனவே தொடங்கி விட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறும். இதில் 9 அணிகளின் முடிவுகள் கவனத்தில் கொள்ளப்படும். ஒவ்வொரு அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன்ஷிப் பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. தென்ஆப்பிரிக்கா இந்த தொடரின் மூலம் உலக சாம்பியன்ஷிப் யுத்தத்திற்குள் நுழைகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker