TAMIL
இந்தியா-இலங்கை மூன்றாவது 20 ஓவர் போட்டி – இலங்கை அணிக்கு 202 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
கவுகாத்தியில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் புனேவில் இன்று நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
ஷிகர் தவான் (7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) 52 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வீரர் சண்டகா வீசிய பந்தில் கேட்ச் ஆனார்.
கடந்த நவம்பர் 2018-க்கு பிறகு முதல் முறையாக சர்வதேச டி-20 போட்டிகளில் தவான் 50 ரன்களை கடந்துள்ளார்.
அவருக்கு அடுத்ததாக களம் இறங்கி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக லோகேஷ் ராகுல் (54 ரன்கள்) சண்டகா வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதே ஓவரில் ஸ்ரே
யாஸ் ஐயர் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் இந்திய அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது.
இதனை தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்தார்.
18 வது ஓவரில் விராட் கோலி (25 ரன்கள்) ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
அவரை தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே கேட்ச் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
கடைசி ஓவர்களில் மனிஷ் பாண்டே (18 பந்துகள் 31 ரன்கள்) மற்றும் ஷர்துல் தாக்கூர் (8 பந்துகள், 22 ரன்கள்) இருவரும் இலங்கை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து இலங்கை அணி 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.