CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பகல்-இரவு டெஸ்ட் நாளை தொடக்கம்
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடை பெறுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவாக அடிலெய்டில் நாளை (17-ந் தேதி) தொடங்குகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து (இளம் சிவப்பு) போட்டியில் ஆடுகிறது. அதாவது முதல் முறையாக பகல் இரவு டெஸ்டில் விளையாடுகிறது.
ஒட்டு மொத்தத்தில் இந்திய அணி விளையாடும் 2-வது பகல் இரவு டெஸ்ட் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த மண்ணில் வங்காளதேசத்துக்கு எதிராக பிங்க் நிற பந்தில் ஆடி இருந்தது.
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே ஒரு முறைதான் டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. 2018-19 ஆண்டில் வீராட் கோலி தலைமையிலான அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனால் தற்போதைய இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் கேப்டன் வீராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நாடு திரும்புகிறார். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் போட்டியை தொடங்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
சிட்னியில் நடந்த பகல் இரவு பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ளும்.
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் அதுவும் பகலிரவு டெஸ்டில் எதிர் கொள்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் ஆஸ்திரேலியா அங்கு விளையாடிய அனைத்து பிங்க் பந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.
நாளைய டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு கேப்டன் வீராட் கோலிக்கு கடினமாக இருக்கும். தொடக்க வீரராக மயங்க் அகர்வாலுடன் விளையாடுவது பிரித்விஷாவா? சுப்மன்கில்லா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சி ஆட்டத்தில் சுப்மன்கில் சிறப்பாக ஆடினார். அதேநேரத்தில் பிரித்விஷா எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. இதனால் சுப்மன்கில்லுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
இதே போல விக்கெட் கீப்பரில் விர்திமான் சகாவா? ரிஷப்பண்டா? என்பதிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ரிஷப்பண்ட் பயிற்சி ஆட்டத்தில் வேகமாக சதம் அடித்து இருந்தார்.
பேட்டிங்கில் வீராட் கோலி, புஜாரா, ரகானே, விகாரி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீரர்களில் முகமது ஷமியும், பும்ராவும் இடம் பெறுவது உறுதி. இருவரும் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக வீசினார்கள்.
3-வது வேகப்பந்து வீரருக்கான போட்டியில் உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், குல்தீப் யாதவ் இடையே போட்டி நடைபெறுகிறது. இதில் அஸ்வினுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
டிம்பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்தியாவை எளிதில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. மேலும் அந்த அணி பகல்-இரவு டெஸ்டில் தோல்வியை சந்தித்தது இல்லை. இது அந்த அணிக்கு சாதகமே.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஸ்டீவ் சுமித், லபுசேன், மார்க்கஸ் ஹாரிஸ், கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
நாளைய பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிஷன் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.