ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்புகிறார். இது இந்திய அணிக்கு பாதிப்பாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில் விராட் கோலி இந்திய அணியில் இல்லை என்பதை மறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் விராட் கோலி இந்தியா திரும்புகிறார். இது கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு திரும்ப மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். விராட் கோலி மிகப்பெரிய வீரர். அவர் ஆஸ்திரேலியா சென்றபோதெல்லாம் ரன்கள் குவித்துள்ளார்.
அவர் இல்லாதது தவற விடுவதாகும். ஆனால் மற்ற வீரர்கள் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல இது ஒரு வாய்ப்பாகும். விராட் கோலி இல்லாததை இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். கேஎல் ராகுல், புஜாரா ஆகியோர் மிகப்பெரிய வீரர்கள். அவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க கிடைத்துள்ள வாய்ப்பு இது.
விராட் கோலி இருக்கிறாரா? இல்லையா? என்பதை அணி மறக்க வேண்டும். இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த முறை வென்றதுபோல், தற்போதும் ஏன் வெல்ல முடியாது? என்பதை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும்’’ என்றார்.