TAMIL
‘இதயத்தை வென்ற கங்குலி’ – பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழாரம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக், யு டியூப் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒரு முறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சமயத்தில் நான் அங்கு சஸ்செக்ஸ் கவுண்டி அணிக்காக விளையாடிக் கொண்டு இருந்தேன்.
இது 2005-06-ம் ஆண்டு நடந்தது என்று நினைக்கிறேன்.
இரண்டு கால் முட்டியிலும் காயத்துக்கு ஆபரேஷன் செய்து 36-37 வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய காலக்கட்டம் அது.
இந்திய அணி சஸ்செக்ஸ் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதியது. அந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் கங்குலி விளையாடவில்லை.
நாங்கள் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் பேட் செய்த போது, கங்குலி என்னை பால்கனியில் இருந்து பார்த்துள்ளார்.
ஆனால் எங்களது ஓய்வறை மற்றொரு கோணத்தில் இருந்ததால் அவரை நான் பார்க்கவில்லை.
உடனடியாக கங்குலி எங்களது ஓய்வறைக்கு வந்து எனக்கு காபி வழங்கி என்னிடம் பேசினார். எனது காயம் குறித்தும், வாழ்க்கை, குடும்பத்தினர் குறித்தும் பரிவோடு விசாரித்தார்.
என்னுடன் 40 நிமிடங்கள் செலவிட்ட அவர் உண்மையிலேயே எனது இதயத்தையும் வென்று விட்டார்.
நாங்கள் களத்தில் நேருக்கு நேர் விளையாடிய போது முழு உத்வேகத்தோடு மோதியுள்ளோம். வாக்குவாதம், மோதல் போக்கு கூட நடந்திருக்கிறது.
எது எப்படி என்றாலும் ஆட்டம் முடிந்ததும் அத்தகைய மனக்கசப்புகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிடுவோம். கங்குலியுடன் எனக்கு ஒரு போதும் தவறான புரிந்துணர்வு இருந்ததில்லை.
கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது தனது பணியை அருமையாக செய்தார். இப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் அவர் தனது நாட்டில் கிரிக்கெட்டை நிச்சயம் முன்னெடுத்து செல்வார்.
அவரது பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
இவ்வாறு சக்லைன் முஷ்டாக் கூறியுள்ளார்.