CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு முதல் இன்னிங்சில் நெருக்கடி கொடுக்க தவறிவிட்டோம் – கோலி

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

முதல்பாதியில் பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்துக்கு போதுமான நெருக்கடியை கொடுக்கவில்லை. சில ரன்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே சொன்னது போல் ஆடுகளம் மெதுவாக காணப்பட்டதால் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்கவில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் எடுத்து விட்டனர். முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவித்த அவர்களுக்கே எல்லா பாராட்டும் சேரும். அது மட்டுமின்றி களத்தில் எங்களது உத்வேகத்தை வெளிப்படுத்தும் உடல்அசைவும், தீவிரத்தன்மையும் முழுமையாக இல்லை. ஆனால் 2-வது இன்னிங்சில் ஓரளவு பரவாயில்லை. அணியில் இடம் பெற்ற 4-வது மற்றும் 5-வது பந்து வீச்சாளரின் (வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம்) பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அஸ்வினும், வேகப்பந்து வீச்சாளர்களும் தொடர்ந்து சீராக பந்து வீசினர். அவர்களை போல் சுந்தரும், நதீமும் சிக்கனமாக பந்து வீசியிருந்தால் கூடுதல் அழுத்தம் கொடுத்து 80-90 ரன் களை குறைத்திருக்கலாம். இதே போல் முதல் இன்னிங்சில் நாங்கள் 80 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தாலும் ஆட்டம் ஏறக்குறைய சரிசம வாய்ப்பில் இருந்திருக்கும். முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த போதே இந்த டெஸ்ட் அவர்கள் பக்கம் சென்று விட்டதாக நினைக்கிறேன்.

இந்த டெஸ்டில் பயன்படுத்தப்பட்ட பந்தின் தரம் (எஸ்.ஜி. வகை பந்து) திருப்திகரமாக இல்லை. 60 ஓவர்களுக்கு பிறகு அதன் தன்மையை இழந்து விட்டது. ஒரு டெஸ்ட் அணியாக இதற்கு முன்பு இத்தகைய அனுபவத்தை சந்தித்ததில்லை. இருப்பினும் தோல்விக்கு இதை காரணமாக சொல்லமாட்டேன். எங்களை விட இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது என்பதே உண்மை. வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி.

இவ்வாறு கோலி கூறினார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் .டாஸ் ஜெயித்தது முக்கியமானது. இருப்பினும் நாங்கள் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். வெளிநாட்டு மண்ணில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதம். கடைசி நாளில் ஆண்டர்சனின் வியப்புக்குரிய பந்துவீச்சு திருப்பத்தை ஏற்படுத்தியது’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker