TAMIL

இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

நிதி நெருக்கடியில் தவிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த போட்டியை டி.வி.யில் ஒளிபரப்பு செய்வதன் மூலம் ரூ.700 கோடி வருவாய் கிடைக்கும்.

இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து 29 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், மருத்துவ அதிகாரி உள்பட 14 உதவியாளர்கள் இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சிறப்பு விமானத்தில் பறக்க உள்ளனர்.

இவர்கள் தங்களது மனைவி, குழந்தைகள் என்று குடும்ப உறுப்பினர்கள் எவரையும் உடன் அழைத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறும் போது, ‘கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்வதற்கு அனுமதி கிடையாது.

அது மட்டுமின்றி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு வரவழைத்து தனிப்பட்ட முறையில் தங்க வைத்தால் கூட பிரயோஜனம் கிடையாது.

ஏனெனில் தொடர் நிறைவடையும் செப்டம்பர் மாதம் வரை ஒட்டுமொத்த அணியினரும் தங்களது குடும்பத்தினருடன் நேரில் உரையாட முடியாது.

இதை அவர்களிடம் தெளிவாக விளக்கி விட்டோம்.

ஹாரிஸ் சோகைல்

எங்கள் அணியினர் இங்கிலாந்து சென்றடைந்ததும் அங்கு பர்மிங்காம் நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அது முடிந்ததும் மான்சென்ஸ்டருக்கு செல்வார்கள். அங்கு உயர்மட்ட மருத்துவ வசதிகளுடன், கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வீரர்கள் 2 வாரம் பயிற்சியில் ஈடுபடுவார்கள்’ என்றனர்.

முன்னதாக இந்த தொடரில் இருந்து பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோகைல் விலகியதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஹாரிஸ் சோகைல் 2015-ம் ஆண்டு நியூசிலாந்து தொடரின் போது, தான் தங்கியிருந்த ஓட்டலில் ஏதோ உருவத்தை பார்த்து பயந்து (பேய் பீதி) விட்டதாக கூறி அது முதல் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போதும் தனது மனைவியை உடன் அழைத்து செல்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இருந்தார். ஆனால் இந்த முறை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் இங்கிலாந்து பயணத்தில் இருந்து பின்வாங்கி விட்டார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker