TAMIL
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இனவெறிக்கு எதிராக அடையாள போராட்டம் நடத்தப்படுமா?வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பதில்
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் போய் சேர்ந்தது.
அணியில் 11 மாற்று வீரர்கள் உள்பட 25 பேர் இடம் பிடித்துள்ளனர்.
மான்செஸ்டரில் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் அவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு அங்கு 3 வார காலம் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
டேரன் பிராவோ, ஹெட்மயர், கீமோ பால் ஆகிய வீரர்கள் மட்டும் கொரோனா பயத்தால் இங்கிலாந்து செல்ல மறுத்து விட்டனர்.
இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து 2-வது டெஸ்ட் (ஜூலை 16-20) மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி (ஜூலை 24-28) மான்செஸ்டரில் நடக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடர் குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவாக இந்த டெஸ்ட்
போட்டி தொடரின் போது நாங்கள் அடையாள போராட்டம் எதுவும் நடத்த திட்டமிட்டு இருக்கிறோமா? என்று கேட்கிறீர்கள்.
நான் இங்கு இருந்து கொண்டு மற்ற வீரர்கள் சார்பிலும் பேசுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.
இந்த விஷயம் குறித்து நாங்கள் எங்களுக்குள் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
அதன் பிறகு தான் அணியாக நாங்கள் என்ன செய்வது என்பதை முடிவு செய்ய முடியும். நாங்கள் ஏதாவது செய்ய நினைத்தால்
அதனை சரியான முறையில் செய்வோம். எங்களது ஒற்றுமையை காட்ட விரும்பினால் எல்லோரும் ஒரேமாதிரி இணைந்து வெளிப்படுத்துவோம்.
கிரிக்கெட் போட்டியின் போது நான் இனவெறி பிரச்சினையை சந்தித்தது கிடையாது. ஆனால் மற்ற வீரர்களுக்கு நேர்ந்த இனவெறி பிரச்சினையை கேள்விப்பட்டு இருக்கிறேன்.
கிரிக்கெட்டிலும் இனவெறி பாகுபாடு இருக்கத் தான் செய்கிறது.
ஆனால் இனவெறி பிரச்சினைகளுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுவாக இனவெறி பிரச்சினை நம்மை சுற்றி இருக்கத் தான் செய்கிறது.
உலகம் முழுவதும் அனைத்து இன மக்களுக்கும் இடையே சமத்துவத்தையும், ஒற்றுமையையும் உருவாக்குவது தான் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும்.
பணத்துக்காக நாங்கள் இந்த போட்டி தொடருக்கு வரவில்லை. இயல்புநிலை திரும்ப முயற்சிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமாகும். எங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் மருத்துவ பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக இருக்கிறது.
உடல் நலம் குறித்த விஷயத்தில் ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.
கடந்த சில மாதங்களாக நாங்கள் எந்தவித போட்டியும் இன்றி இருந்தோம். இந்த டெஸ்ட் போட்டி தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.
இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.
இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் சாய்ப்பது என்பது சவாலானது.
இருப்பினும் கடந்த ஆண்டு (2019) அவர்களை எங்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது போன்று இந்த முறையும் டெஸ்ட் தொடரை வெல்ல முயற்சிப்போம்.
ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் விளையாடப் போவது தான் வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.