CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி கடைசி வாரத்தில் பாகிஸ்தான் சென்று மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. இதனால் அந்த தருணத்தில் பாகிஸ்தானுக்கு இரண்டாம் தர அணியை தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் அனுப்ப முடியும்.
15 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புகிறது. நட்சத்திர வீரர்கள் இடம் பெறாவிட்டால் அந்த போட்டி தொடரை ஒளிபரப்புவதன் மூலம் போதிய வருவாய் ஈட்ட முடியாது. இதனால் இங்கிலாந்து அணியின், பாகிஸ்தான் தொடரை அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.