TAMIL
‘இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை பென் ஸ்டோக்ஸ் ஏற்கக்கூடாது’ – கெவின் பீட்டர்சன் வேண்டுகோள்
வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி தொடங்குகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் மருத்துவ பாதுகாப்புடன் இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் சமயத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட்டின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
இதனால் ஜோ ரூட் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்த பொருத்தமானவர் என்று ஜோ ரூட் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘பென் ஸ்டோக்ஸ் தனது நிலையில் இருந்து மாறி கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டுமா? என்று கேட்டால் வேண்டாம் என்று தான் சொல்வேன்.
ஜோஸ் பட்லரை கேப்டன் பணியை கவனிக்க சொல்லலாம். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விளையாடுபவர்களும், அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பவர்களும் சில நேரங்களில் சிறந்த கேப்டனாக விளங்கியதில்லை.
அத்துடன் சில நேரங்களில் கூடுதல் நெருக்கடி தடுமாற்றத்தை அளிக்கும். கேப்டன் பதவியால் நான் தடுமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன்.
அத்துடன் உடைமாற்றும் அறையில் வீரர்களை கையாள்வது கடினமானதாகும்‘ என்று தெரிவித்துள்ளார்.