TAMIL
இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி
கடந்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி கண்ட தோல்வியால் பாகிஸ்தான் அணியின் அரைஇறுதி வாய்ப்பு பறிபோனது.
இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அதில் ‘இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா, விராட்கோலி ஆட்டம் மர்மமாக இருந்தது.
விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் டோனி அதிரடியாக அடித்து ஆடாமல் ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டியது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்து இருந்தார்.
இதை சுட்டிகாட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிக்கந்தர் பக்த் தனது டுவிட்டர் பதிவில், ‘நாங்கள் கணித்த படி
கடந்த உலக கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணியை வெளியேற்ற இந்திய அணி வேண்டுமென்றே இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றுள்ளது என்பதை பென் ஸ்டோக்ஸ் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக டுவிட்டர் மூலம் சிக்கந்தர் பக்த்க்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், ‘எனது புத்தகத்தில் நீங்கள் கூறிய வார்த்தையை கண்டுபிடிக்க முடியாது.
ஏனெனில் அப்படி நான் ஒருபோதும் சொன்னதில்லை. இதைத்தான் வார்த்தையின் அர்த்தத்தை திரித்து சொல்வது என்பார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.