CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: சரிவில் இருந்து மீளும் முனைப்பில் இந்தியா – 4-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.
ஒரே இடத்தில் 20 ஓவர் தொடர் நடந்த போதிலும் இந்திய அணியால் ஆடுகளத்தன்மையை இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை. தோல்வியை தழுவிய இரு ஆட்டங்களிலும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் சொதப்பியது தான் (3 விக்கெட்டுக்கு 22 ரன், மற்றும் 3-24) வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் சாதுர்யமான வேகமும், பவுன்சும் நமது வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கியது.
இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரின் பேட்டிங் மட்டுமே சீராக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (1, 0, 0) மூன்று ஆட்டங்களிலும் மோசமாக ஆடினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் அவருக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி நிற்கிறார். ‘இரண்டு ஆட்டங்களுக்கு முன்பு நான் கூட நன்றாக ஆடவில்லை. இத்தகைய நிலைமையை சீக்கிரமாகவே மாற்ற முடியும். லோகேஷ் ராகுல் எங்களின் சாம்பியன் கிரிக்கெட் வீரர். கடந்த 2-3 ஆண்டுகளில் அவரது ரன் குவிப்பை பார்த்தால், 20 ஓவர் கிரிக்கெட்டில் மற்றவர்களை காட்டிலும் அனேகமாக அவர் தான் சிறந்தவராக இருப்பார். ரோகித் சர்மாவுடன் டாப் வரிசையில் எங்களது பிரதான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் இருப்பார். எனவே அவர் பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை நம்பிக்கையுடன் விளையாடி, நாலைந்து ஷாட்டுகள் ‘கிளிக்’ ஆகி விட்டால் போதும். அதாவது 5-6 பந்துகளை அடிப்பது தான் விஷயமே. அவ்வாறு செய்து விட்டால் இயல்பான ஆட்டம் வெளிப்பட தொடங்கி விடும்’ என்று விராட் கோலி கூறினார். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ‘எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் இது போன்ற தடுமாற்றமான நிலை வரத் தான் செய்யும். 20 ஓவர் கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டில் எங்களது மிகச்சிறந்த பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் தான். 3 ஆட்டங்களில் சோபிக்கவில்லை என்பதற்காக இந்த உண்மை மாறி விடாது. நிச்சயம் இதில் இருந்து அவர் மீண்டு வருவார்’ என்று ரத்தோர் குறிப்பிட்டார்.
ஒரு வேளை ராகுலை கழற்றி விட முடிவு செய்தால், அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அல்லது சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படலாம். பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஓரளவு சிக்கனமாக பந்து வீசியிருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ரன்களை வாரி வழங்கியுள்ளார். மறுபடியும் பந்து வீச தொடங்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 3 ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. அதனால் பந்துவீச்சு துறையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொண்டது. கடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 10 பந்துகள் மீதம் வைத்து ஜோஸ் பட்லரின் (52 பந்தில் 83 ரன்) அதிரடியால் சிரமமின்றி எட்டிப்பிடித்தது. இதே ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோவும் பார்முக்கு திரும்பியுள்ளார். இங்குள்ள ஆடுகளத்தில் பந்து வெகுவாக ‘பவுன்ஸ்’ ஆகிறது. இந்த சூழலை வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க்வுட்டும், ஜோப்ரா ஆர்ச்சரும் நேர்த்தியாக பயன்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்களை மிரள வைக்கிறார்கள். இதே உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் தாக்குதல் தொடுப்பார்கள்.
இந்த தொடரில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்று ஆட்டங்களிலும் ‘டாஸ்’ ஜெயித்து 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் ‘டாஸ்’ என்ற மாயையை உடைத்தெறிந்து வெற்றி பெறும் வகையில் செயல்பட வேண்டும். அப்போது தான் ஆண்டின் கடைசியில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராக முடியும் என்று இந்திய கேப்டன் கோலி ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் இந்திய வீரர்கள் முழுவீச்சில் போராடுவார்கள் என்று நம்பலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் அல்லது ஷிகர் தவான் அல்லது சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் அல்லது நவ்தீப் சைனி அல்லது தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது அக்ஷர் பட்டேல்.
இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், பேர்ஸ்டோ, மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இ்ந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.