TAMIL
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 326 ரன்னில் ஆல்-அவுட் – ஷான் மசூத் சதம் அடித்தார்
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்க நாள் முடிவில் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்திருந்தது.
பாபர் அசாம் 69 ரன்னுடனும், தொடக்க வீரர் ஷான் மசூத் 46 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். மழையால் முதல் நாளில் 41 ஓவர்கள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பாகிஸ்தான் தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே பாபர் அசாம் (69 ரன்) ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் சிக்கினார்.
இது ஆண்டர்சனின் 590-வது விக்கெட்டாகும்.
அடுத்து வந்த ஆசாத் ஷபிக் (7 ரன்), விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (9 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 176 ரன்களுடன் தடுமாறியது.
இதன் பின்னர் ஷான் மசூத்துடன், ஷதப் கான் இணைந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இங்கிலாந்து பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்து ஆடிய ஷான் மசூத் தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார்.
அவர் தொடர்ந்து 3 இன்னிங்சில் சதம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அணியின் ஸ்கோர் 281 ரன்களாக உயர்ந்த போது ஷதப் கான் (45 ரன்) வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ்சின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்திய ஷான் மசூத் 156 ரன்களில் (319 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை ஆடியது.
14 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 3 விக்கெட்டுக்கு 32 ரன்களுடன் தள்ளாடியது. பென் ஸ்டோக்ஸ் ரன்னின்றி வீழ்ந்தார்.