TAMIL

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்னில் சுருண்டது

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 369 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களுடன் பரிதவித்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ரன்) ஆபத்தை தவிர்த்தது.

கேப்டன் ஜாசன் ஹோல்டர் 46 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 37 ரன்களிலும் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் வீழ்ந்தனர்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 65 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 14 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இன்னிங்சில் அவர் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் சாய்ப்பது இது 18-வது முறையாகும்.

அடுத்து 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்சும், டாம் சிப்லியும் அருமையான தொடக்கம் உருவாக்கித் தந்தனர்.

உள்ளூரில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இங்கிலாந்து தொடக்க ஜோடி என்ற பெருமையை பர்ன்ஸ்-சிப்லி பெற்றனர்.

அணியின் ஸ்கோர் 114 ரன்களை எட்டிய போது சிப்லி (56 ரன்) எல்.பி.டபிள்யூ.ஆனார்.

ரோரி பர்ன்ஸ் தனது பங்குக்கு 90 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 58 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அப்போது கேப்டன் ஜோ ரூட் 68 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker