TAMIL
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் உள்ள மவுன்ட்மாங்கானுவில் நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ரன்னும், ஜோ டென்லி 74 ரன்னும், ரோரி பர்ன்ஸ் 52 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 615 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமான வாட்லிங் 205 ரன்னும், மிட்செல் சான்ட்னெர் 126 ரன்னும், காலின் டி கிரான்ட்ஹோம் 65 ரன்னும், கேப்டன் கேன் வில்லியம்சன் 51 ரன்னும் எடுத்தனர்.
262 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 27.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஜோ டென்லி 7 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜோ டென்லி, கேப்டன் ஜோரூட் ஆகியோர் பேட்டிங்கை தொடர்ந்தனர். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஜோரூட் 11 ரன்னில் கிரான்ட்ஹோம் பந்து வீச்சில் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 28 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய ஜோ டென்லி 35 ரன்னிலும், ஆலிவர் போப் 6 ரன்னிலும், ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 17 ரன்களுக்குள் இந்த 4 விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன.
9-வது விக்கெட்டுக்கு ஜோப்ரா ஆர்ச்சர், சாம் குர்ரனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடியது. இந்த ஜோடியை நீல் வாக்னெர் பிரித்தார். ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்னில் நீல் வாக்னெர் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் மேட் ஹென்றியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்த பந்தில் ஸ்டூவர்ட் பிராட் (0) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் நீல் வாக்னெர் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 96.2 ஓவர்களில் 197 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி உள்ளூரில் தனது கடைசி 10 டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமையை தக்கவைத்துக்கொண்டது. சாம் குர்ரன் 29 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னெர் 5 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர் 3 விக்கெட்டும், டிம் சவுதி, காலின் டி கிரான்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘டாஸ்சை நாங்கள் இழந்ததுடன், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன்களுக்கு மேல் எடுத்ததால் நாங்கள் ஏதாவது ஒருவகையில் சிறப்பாக செயல்பட வேண்டியது தேவையானதாக இருந்தது. நாங்கள் முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு மேல் குவித்ததால் கடைசி இன்னிங்சில் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. மிடில் ஆர்டரில் வாட்லிங் இரட்டை சதம் அடித்ததும், மிட்செல் சான்ட்னெர் சதம் அடித்ததும், காலின் டி கிரான்ட்ஹோம் சிறப்பாக பேட்டிங் செய்ததும் எங்களுக்கு அனுகூலமாக அமைந்தது. இங்கிலாந்து போன்ற சிறந்த அணிக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் 50, 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தால் உத்வேகத்தை நமக்கு சாதகமாக திருப்ப போதுமானதாக இருக்காது. சிலர் நிலைத்து நின்று விளையாடி சதம் அடிக்க வேண்டியது முக்கியமானதாகும். அதனை எங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செய்தனர். கடைசி நிலை பேட்ஸ்மேன்களும் நன்றாக செயல்பட்டனர். இது தான் இந்த போட்டியில் இரண்டு அணிக்கும் இடையிலான வித்தியாசமாகும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது அரைசதத்தை சதமாக மாற்றவில்லை. இந்த போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. வலுவான பவுலிங்கை கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி தனி சிறப்பானதாகும்’ என்று தெரிவித்தார்.
தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவிக்கையில், ‘போட்டியின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் காலையில் நாங்கள் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்தோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து 18 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 2-வது டெஸ்டில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். மனதளவில் நாங்கள் இன்னும் வலுவாக இருக்க வேண்டும். தவறுகளில் இருந்து விரைவாக பாடம் கற்றுக்கொண்டால் நல்ல முன்னேற்றம் காண முடியும்.’ என்றார்.