CRICKETLATEST UPDATESTAMIL

இங்கிலாந்தில் 5 டெஸ்டில் விளையாடுகிறது இந்திய அணி – போட்டி அட்டவணை அறிவிப்பு

கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டில் இங்கிலாந்தில் சில சர்வதேச தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டன. உள்ளூர் போட்டிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்களை அனுமதிக்க முடியவில்லை. இதனால் ரூ.900 கோடிக்கு மேல் இழப்பீட்டை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதை அடுத்த சீசனில் ஈடுகட்ட தீவிரம் காட்டி வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி அடுத்த ஆண்டில் (2021) உள்நாட்டில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. இதன்படி அடுத்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. லண்டன் லார்ட்ஸ், லீட்ஸ், ஓவல், மான்செஸ்டர் ஆகிய இடங்களில் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்துக்கு 2018-ம் சென்று விளையாடிய போது டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது நினைவு கூரத்தக்கது. முன்னதாக இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்திய மண்ணில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஜூன் மாதத்துக்குள் முடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. ஒருவேளை கால நீட்டிப்பு செய்யப்பட்டால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூடுதலாக ஒரு டெஸ்ட் தொடரை (இலங்கைக்கு எதிராக) நடத்த உத்தேசித்துள்ளது.

ஜூன் மாதம் இலங்கை அணி இங்கிலாந்தில் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் பிறகு ஜூலை மாதம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பயணித்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சென்று 2 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அபாயத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி கடந்த ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் ஆடியதற்கு பிரதிபலனாக 16 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி அங்கு செல்ல சம்மதித்துள்ளது.

அக்டோபர் 14, 15-ந்தேதிகளில் கராச்சியில் இவ்விரு 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடிவிட்டு அங்கிருந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இந்தியாவுக்கு இங்கிலாந்து அணியினர் புறப்படுவார்கள்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker