TAMIL

ஆஸ்திரேலிய தொடரில் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை: கங்குலி தகவல்

இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தொடர் நடைபெறாமல் போனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.1,480 கோடி இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டி தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது.

இந்த போட்டி தொடரின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அந்த நாட்டு அரசுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின்

ராபர்ட்ஸ் கடந்த மாதம் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 5 போட்டிகள் கொண்டதாக நடத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

இரு வாரியங்களுக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. இந்த சீசனில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுமா? என்று உறுதியாக சொல்ல முடியாது.

வருங்காலத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்துவது குறித்து விவாதித்து இருக்கிறோம்.

இது அடுத்த வருங்கால அட்டவணையில் சாத்தியமாகலாம்‘ என்று கூறியிருந்தார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி

தொடரில் இந்திய அணி 5 போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஒருநாள் போட்டி தொடரும் நடைபெறுகிறது.

அத்துடன் இந்த பயணத்தின் போது வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் இந்த போட்டி தொடரின் கால அளவை நீட்டிக்க செய்யும்‘ என்று பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘எங்களுடைய நிதி நிலைமையை நாங்கள் ஆராய வேண்டும். எங்களது கைவசம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்த பிறகே ஒரு முடிவெடுக்க வேண்டும்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

இந்த இழப்பு மிகவும் பெரியதாகும்.

ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டி நடந்தால் ஈர்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.

1999-ம் ஆண்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் (ஆசிய சாம்பியன்ஷிப்) போட்டியில் கடைசி நாளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதனால் அந்த போட்டியில் விறுவிறுப்பு குறைவாக இருந்தது தெளிவாக தெரிந்தது.

குறைவான ரசிகர்களை அனுமதித்து போட்டியை நடத்தினாலும், அவர்களை கண்காணிப்பதில் பல சிரமங்கள் உள்ளது‘ என்றார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து வீட்டிலேயே முடங்கி

கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்த வாரத்தில் இருந்து வெளியில் சென்று பயிற்சியை தொடங்க வழிவகை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருப்பதால் மும்பையில் வசித்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தங்களது வெளிப்புற பயிற்சியை தொடங்குவது கடினம் என்று தெரிகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker