CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றமே: சூர்யகுமார் யாதவ் வேதனை
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஐ.பி.எல். போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் சிலர் தேர்வுக்குழுவை விமர்சித்து இருந்தனர்.
இந்தநிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று சூர்யகுமார் யாதவ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து என்னால் நிலையாக இருக்க இயலவில்லை. முடிந்த வரை என்னை அந்த எண்ணத்தில் இருந்து விலக்கி வைத்துக் கொள்ள முயற்சித்தேன். அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டேன். ஆனாலும் அதுகுறித்த எண்ண ஓட்டத்தை தவிர்க்க முடியவில்லை.
எனது ஏமாற்றத்தை ரோகித் சர்மாவிடம் வெளிப்படையாக வெளிப்படுத்தினேன். அதற்கு அவர், தற்போதைய நிலையில் நீ சிறப்பாக செயல்பட்டு வருகிறாய். இந்திய அணிக்கு தேர்வாகாதது குறித்து யோசிக்காமல் ஐ.பி.எல். போட்டியில் தற்போது எவ்வாறு சிறப்பாக ஆடி வருகிறாயோ அதைத்தொடர்ந்து அப்படியே கடைபிடி. உனக்கான நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
அவரது வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தது. எனக்கான வாய்ப்புக்காக என்னை இன்னும் சிறப்பாக தயார்படுத்திக்கொள்ள தொடங்கி உள்ளேன்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.