TAMIL
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகருக்கு மூக்கு உடைந்தது
ஆஸ்திரேலியாவில் மார்ஷ் கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டுவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மேற்கு ஆஸ்திரேலியா-தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில் தெற்கு ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த அணியின் வெஸ் அகர் அடித்த ஒரு பந்து, ‘மிட்ஆன்’ திசையில் கேட்ச் செய்ய முயற்சித்த அவரது சகோதரரான ஆஷ்டன் அகரை (மேற்கு ஆஸ்திரேலியா) பதம் பார்த்தது. அதாவது சில அடி ஓடி வந்து அவர் தடுமாற, பந்து நேராக அவரது மூக்கின் மேல்பகுதியில் பலமாக தாக்கி ரத்தம் கொட்டியது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பிறகு அவரது தம்பி வெஸ் அகர் (9 ரன்) கொஞ்சம் பதற்றத்துடனே பேட்டிங் செய்ததை காண முடிந்தது. இந்த ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியா 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
26 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ஆஷ்டன் அகர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட், 9 ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் 21 ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்.