TAMIL
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சனின் இன்ஸ்டாகிராம் கணக்கு ‘திடீர்’ முடக்கம்
ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
வாட்சனின் ‘டுவிட்டர்’ கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டிருந்தது. ஹேக்கர்கள் அவரது கணக்கை முடக்கிய சில மணி நேரத்திலேயே அது மீட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது ‘இன்ஸ்டாகிராம்’ கணக்கும் திடீரென முடக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பல ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டு இருந்தன. ஹேக்கர்களின் இந்த செயலால் வாட்சன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட சட்டவிரோத புகைப்படங்களுக்காக அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். முதலில் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இப்போது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது இன்ஸ்டாகிராம் மிக விரைவாக உதவ வேண்டும். ஆனால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.