CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யர் தேர்வு?
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதியும், 20 ஓவர் தொடர் டிசம்பர் 4-ந்தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந்தேதியும் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா இடம் பெற்றுள்ளனர். காயத்தில் இருந்து குணம் அடைந்த அவர்கள் இன்னும் ஆஸ்திரேலியா செல்லவில்லை.
அவர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் ஆஸ்திரேலியா வருவார்கள் என்று அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் ஆடுவது சந்தேகமே. அவர்கள் முழு உடல் தகுதி பெறாததால் விளையாடு வதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
இதன்காரணமாக அணி நிர்வாகம் டெஸ்டுக்கு மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யரை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்ரேயாஷ் அய்யர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டிகள் முடிந்த பிறகு அவர் மற்ற வீரர்களுடன் நாடு திரும்புவார்.
தற்போது ஸ்ரேயாஷ் அய்யர் டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக தேர்வு செய்வதால் அவர் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து இருப்பார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதால் அவர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆடவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
விராட்கோலி இல்லாத நிலையில் ரோகித்சர்மாவும் டெஸ்ட் தொடருக்கு முழு உடல் தகுதி பெறுவாரா? என்ற கேள்விக்குறி இருக்கிறது. இதனால் ஸ்ரேயாஷ் அய்யர் டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.