CRICKETLATEST UPDATESNEWSTAMIL

ஆஸ்திரேலியாவுடன் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி பந்து வீச்சு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று தொடங்கியது.

கொரோனா தொற்று பரவலால் இந்திய அணியின் சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு இந்திய அணி களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அதுவும் ஸ்டேடியத்தில் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.

இந்திய அணியில் காயத்தால் ரோகித் சர்மா இடம் பெறாதது பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட இவர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமாகும்.

ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டும் விராட் கோலி சாதனையின் விளிம்பில் நிற்கிறார். இந்த தொடருக்குள் அவர் 133 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் பும்ரா, ஷமி, ஜடேஜா, சாஹல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். உள்ளூர் சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சமாகும்.அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர். எங்களுக்கு எதிராக நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அவரின் காயம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் இருப்பார் என்று கருதுகிறேன். அகர்வால் சிறப்பாக விளையாடி வருகிறார்’ என்றார். தங்கள் அணி சரியான கலவையில் அமைந்திருப்பதாக கூறிய பிஞ்ச், மைதானத்திற்கு ரசிகர்கள் வருகை தர இருப்பது வீரர்களை உற்சாகப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்திய அணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

சிட்னி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சும் ஓரளவு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஒரு நாள் போட்டிகளில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் முதலில் பேட் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 312 ரன்.

இந்திய அணி இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. வானிலையை பொறுத்தவரை நன்கு வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பந்து வீசுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker