TAMIL

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி ‘திரில்’ வெற்றி

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது.

கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடத்தப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 44 ரன்னும் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மலான் 66 ரன்னும் (43 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

கேப்டன் இயான் மோர்கன் (5 ரன்), பேர்ஸ்டோ (8 ரன்) உள்ளிட்ட வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்டன் அகர், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் கண்டனர்.

இருவரும் அடித்து விளையாடி அணியின் ஸ்கோரை வேகமாக அதிகரிக்க செய்தனர்.

10.5 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

அதன் பிறகு இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் விரைவாக சரிந்ததுடன், அந்த அணியின் அதிரடி ஆட்டமும் கரைந்து போனது.

அபாரமாக ஆடிய ஆரோன் பிஞ்ச் (46 ரன்கள், 32 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), டேவிட் வார்னர் (58 ரன்கள், 47 பந்து 4 பவுண்டரி) விக்கெட்டை ஜோப்ரா ஆர்ச்சர் கைப்பற்றினார்.

ஸ்டீவன் சுமித் (18 ரன்), மேக்ஸ்வெல் (1 ரன்) விக்கெட்டை அடில் ரஷித் ஒரே ஓவரில் வீழ்த்தி ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக திருப்பினார்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.

டாம் கர்ரன் வீசிய அந்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு பவுண்டரி அடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக பந்து வீசிய டாம் கர்ரன் கடைசி பந்தில் தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அந்த ஓவரில் அவர் 12 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது.

இதனால் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

180 ரன்களுக்கு குறைவான இலக்கு நிர்ணயித்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2016-ம் ஆண்டுக்கு பிறகு பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்திய நேரப்படி மாலை 6.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker