TAMIL
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றது.
சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒருநாள் பாட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் அனுமதி இன்றி காலி ஸ்டேடியத்தில் அரங்கேறிய இந்த போட்டியில் கேலரிக்கு அடிக்கப்பட்ட பந்துகளை பீல்டர்களே தேடிச் சென்று எடுத்தனர்.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்தது.
இதற்கிடையே, நியூசிலாந்து அரசு கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
அதாவது ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பயணிகள் நேரடியாக நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், எல்லையில் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் முடிவில் கொரோனா தாக்கம் எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்து இருந்தது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக நியூசிலாந்து அணியினர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒரு நாள் போட்டிகளை ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக நாடு திரும்பினர்.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், கொரோனா நோய்க்கான மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.
அதில் அவருக்கு நோய் தாக்கம் எதுவுமில்லை என்பது உறுதியானது.
இதனால் அவர் இன்று தாயகம் திரும்ப இருக்கிறார்.
நியூசிலாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலிய அணி, இந்த மாதம் இறுதியில் நியூசிலாந்து சென்று விளையாட இருந்த மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரும் திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை.
இந்த 20 ஓவர் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.