CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜடேஜா ஆடுவாரா?
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
4 டெஸ்ட் போட்டி தொடரில் அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு படு தோல்வியை தழுவியது.
இந்த மோசமான ஆட்டத்தால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்கும் 2-வது டெஸ்டில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும். இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 5 மாற்றங்கள் இருக்கும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா இடத்தில் லோகேஷ் ராகுலும், விராட் கோலி நாடு திரும்புவதால் அவரது இடத்தில் சுப்மன்கில்லும் இடம் பெறுகிறார்கள். அதாவது அகர்வாலும், ராகுலும் 2-வது டெஸ்டில் தொடக்க வீரர்களாக ஆடலாம். சுப்மன்கில் டெஸ்டில் அறிமுகமாகிறார். அவர் 4-வது வரிசையில் களம் இறங்கலாம்.
விர்த்திமான்சகாவுக்கு பதிலாக ரிஷப்பண்ட் வாய்ப்பை பெறுகிறார். வேகப்பந்து வீரர் முகமது ஷமி காயமடைந்து உள்ளதால் எஞ்சிய 3 டெஸ்டிலும் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் முகமது சிராஜ் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுகிறார்கள்.
ஹனுமான் விகாரியின் இடத்தில் ஆல் ரவுண்டர் ஜடேஜா வாய்ப்பை பெறலாம். மேற்கண்ட தகவலை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
2-வது டெஸ்டில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் (3 வேகப்பந்து, 2 சுழற்பந்து) களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜடேஜா 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஜடேஜா காயமடைந்தார். இதனால் எஞ்சிய இரண்டு 20 ஓவர் போட்டியிலும், முதல் டெஸ்டிலும் அவர ஆடவில்லை.
தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்றுவிட்டதால் 2-வது டெஸ்டில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஜடேஜா ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஹனுமான் விகாரி மிடில் ஆர்டர் வரிசைக்கு பொறுத்தமானவர் என்பதால் அவர் கழற்றிவிடப்படுவாரா? என்பது கேள்விக்குறியே. அதே நேரத்தில் அவர் அடிலெய்டு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 16 ரன்னும் 2-வது இன்னிங்சில் 8 ரன்னும்தான் எடுத்தார்.