CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? நாளை முதல் 20 ஓவர் போட்டி
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்று 20 ஓவர் தொடரின் முதல் போட்டி கான்பெராவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரையாவது கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கடைசி ஒருநாள் போட்டியில் பெற்ற ஆறுதல் வெற்றி இந்திய வீரர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. இந்திய அணி கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துடன் 20 ஓவர் தொடரில் மோதியது.
இதில் 5 போட்டியிலும் வென்று அந்த அணியை அதன் சொந்த மண்ணில் ‘ஒயிட்வாஷ்’ செய்தது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஓவர் போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 2 போட்டியில் வெற்றி பெற்றது.
இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. 3 போட்டி கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
தற்போதுள்ள இந்திய அணி பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறது. ஹர்த்திக் பாண்ட்யா சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்த தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதேபோல கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், தவான், ஸ்ரேயாஷ் அய்யர், ஜடேஜா ஆகியோரும் 20 ஓவர் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீரர் டி.நடராஜன், சுழற்பந்து வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.
இதில் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தினார். தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே அவர் சாதித்தார். 20 ஓவர் போட்டியிலும் அவர் ஆதிக்கத்தை செலுத்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் நடராஜன் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். யார்க்கர் பந்து வீசுவதில் அவர் வல்லவர். இதேபோல வாஷிங்டன் சுந்தரும் நேர்த்தியுடன் பந்துவீசக் கூடியவர்.
இதேபோல பும்ரா, முகமது ஷமி, தீபக் சாஹர், யசுவேந்திர சாஹல் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர்.
ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பேட்டிங், பந்து வீச்சில் அந்த அணி சம பலத்துடன் உள்ளது.
கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கும்மின்ஸ், ஹாசல்வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். வார்னே விளையாடாதது அந்த அணிக்கு பாதிப்பே.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.