TAMIL
ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம் – டிம் பெய்ன் கருத்து
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் முடிவடைந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்திலும், லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. தொடர் சமனில் முடிந்தாலும், கடந்த முறை சாம்பியன் என்ற வகையில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்க வைப்பது இதுவே முதல்முறையாகும்.
47 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஆஷஸ் போட்டி தொடர் சமனில் முடிந்துள்ளது. சமனில் முடிந்த 6-வது ஆஷஸ் தொடர் இதுவாகும். ஏற்கனவே 1938-ம் ஆண்டில் 1-1 என்ற கணக்கிலும், 1962-63-ம் ஆண்டில் 1-1 என்ற கணக்கிலும், 1965-66-ம் ஆண்டில் 1-1 என்ற கணக்கிலும், 1968-ம் ஆண்டில் 1-1 என்ற கணக்கிலும், 1972-ம் ஆண்டில் 2-2 என்ற கணக்கிலும் ஆஷஸ் போட்டி தொடர் சமனில் முடிந்து இருக்கிறது.
இந்த போட்டி தொடரில் ஒரு இரட்டை சதம் உள்பட 3 சதம், 3 அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 774 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் சுமித் ஆகியோர் தொடர்நாயகன் விருதை பெற்றனர். 774 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒரு ஆஷஸ் தொடரில் அதிக ரன் குவிப்பில் ஸ்டீவன் சுமித் 5-வது இடத்தை பிடித்தார். இந்த வகையில் 1930-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 974 ரன்னும், 1928-29-ம் ஆண்டில் இங்கிலாந்தின் ஹேமன்ட் 905 ரன்னும், 1989-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் 839 ரன்னும், 1936-37-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 810 ரன்னும் குவித்து முதல் 4 இடங்களில் இருக்கின்றனர்.
கடைசி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் அளித்த பேட்டியில், ‘முதல் நாளில் நாங்கள் சில வாய்ப்புகளை தவற விட்டது பாதிப்பை ஏற்படுத்தியது. எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவுலர்களுக்கு பக்கபலமாக செயல்பட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். நாங்கள் இந்த ஆட்டத்தில் செயல்பட்டதை விட இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். கடந்த 18 ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பையை தக்க வைக்க முடியாமல் இருந்த நிலையை நாங்கள் மாற்றி இருப்பது பெரிய விஷயமாகும். இந்த தொடர் உத்வேகமும், சவாலும், போட்டியும் நிறைந்ததாக இருந்தது. மேத்யூ வேட் அடித்த சதம் அருமையானதாகும். கேப்டன் பதவியை அனுபவித்து விளையாடி வருகிறேன். எனக்கு இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் எஞ்சி இருப்பதாக நினைக்கிறேன். இங்கிலாந்து ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதை விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வாரம் எங்களுக்கு சிறப்பாக இருந்தது. டாசில் தோற்றாலும் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமானது. இந்த போட்டியில் எல்லா நேரத்திலும் நாங்கள் நெருக்கமாகவே இருந்தோம். ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் அவருக்கு பக்கபலமாக செயல்பட்ட பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். இந்த போட்டி தொடர் முழுவதும் கடுமையாக போராடினோம். ஓய்வு பெறும் பயிற்சியாளர் டிரோவர் பெய்லிஸ் வீரர்களுடன் நல்ல புரிதலுடன் செயல்பட்டதுடன் இங்கிலாந்து அணியை சரியான பாதையில் பயணிக்க வைத்தார். அவரது வழிகாட்டுதலில் உலக கோப்பையை வென்றது சிறப்பு வாய்ந்ததாகும். எங்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு அளித்தனர்’ என்றார்.