CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் இந்தியாவுக்கு 375 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழக்காமல் சீரான வகையில் ரன்கள் எடுத்து வந்தது.
பவர்பிளே-யான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. ஆரோன் பிஞ்ச் 69 பந்திலும், டேவிட் வார்னர் 54 பந்திலும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 27.5 ஓவரில் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.
டேவிட் வார்னர் 76 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். இவர் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஸ்டீவ் ஸ்மித் 36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலியா 39 ஓவரில் 250 ரன்னைத் தொட்டது. ஆரோன் பிஞ்ச் 117 பந்தில் சத்ம அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஆரோன் பிஞ்ச் 124 பந்தில் 114 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 40 ஓவரில் 264 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் முதல் பந்திலேயே வெளியேறினார். ஆனால் மேக்ஸ்வெல் 19 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 45 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேக்ஸ்வெல் களத்தில் நிற்கும்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டும் நிலையில் இருந்தது. அவர் அவுட்டானதும் ஸ்கோர் உயரும் வேகம் சற்று குறைந்தது.
ஸ்மித் சிறப்பாக விளையாடி 62 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் கடைசி ஓவரில் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 66 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ரன்கள் அடித்தார்.
ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்துள்ளது. முகமது சமி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், பும்ரா 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், சைனி 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், சாஹல் 89 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 375 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்ய இருக்கிறது.