TAMIL
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றி
அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமன் (டை) ஆனது.
கடைசி 3 பந்தில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்ட போது ரஷித்கான் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார்.
அத்துடன் எக்ஸ்டிரா வகையில் 2 ரன்னும் கிடைத்ததால் ஆட்டம் சமன் ஆகிப்போனது.
இதன் பின்னர் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 8 ரன் எடுத்தது.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி முதல் 5 பந்தில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன் எடுத்தது.
இறுதி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசிய கடைசி பந்தை கெவின் ஓ பிரையன் சிக்சருக்கு விரட்டி திரில் வெற்றியை தேடித்தந்தார்.
20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 12 தோல்விகளுக்கு பிறகு அயர்லாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இருப்பினும் 3 போட்டி கொண்ட இந்த தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.