TAMIL
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 187 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க நாளில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 277 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தனது முதலாவது சதத்தை நிறைவு செய்த ஷமார் புரூக்ஸ் 111 ரன்கள் (214 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். ஜான் கேம்ப்பெல் 55 ரன்னும், டாவ்ரிச் 42 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 109 ரன்களுடன் பரிதவிக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் ஜாவித் அகமதி (62 ரன்) அரைசதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரகீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் ஒன்றில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய (முதல் இன்னிங்சில் எடுத்த 7 விக்கெட்டையும் சேர்த்து) முதல் வெஸ்ட்இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை கார்ன்வால் பெற்றார்.
ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 19 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 3 விக்கெட் மட்டுமே இருப்பதால் இந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.